Monday, July 29, 2013

ஸ்கைப் பல்லி

முகம் பார்த்து பேச ஸ்கைபில் மகளை அழைத்தால்
"அப்பா, பல்லி பாரேன் 
அப்படியே ரொம்ப நேரம் இருக்"கென்று
சுவற்றை நோக்கி கணணித்திரையை திருப்புகிறாள்
அவளிடம் பேசும் ஆசையில் 
பல்லியை ச்சூவென துரத்தினால்
"பாவம்பா தொரத்தாத"..
ஊருக்கு போய் எல்லா பல்லியையும் 
மொதல்ல ஒருவழி பண்ணணும்

அப்பாவின் டைரி கதை

போக்குவரத்து தொழிலாளிகளுக்கு வருடா வருடம் டைரி ஒன்று தருவார்கள். என் தந்தை நடத்துனர். அவரின் நாட்குறிப்பில் தடம் எண் குறிப்பிட்டு இன்று ஏறினேன், இறங்கினேன், என்பதை தவறாமல் குறிப்பிடுவார். சில நேரங்களில் மாதத்திற்கு ஒரு முறையோ இரு முறையோ வேறு சில எழுதியிருக்கும். தினமும் வசூல் செய்ததை சன்னலில் ஒரு கொக்கி மாட்டி சேர்த்திருக்கும். பீரோவின் உள்ள சம்பளம் ரசீது குறைந்த பட்சம் 50 மாதத்திற்கேனும் இருக்கும். ஒரு வருடம் அவரோடு மல்லுக்கட்டி டைரி வாங்க அம்மாவிடன் புகார் கூட செய்தேன். வெறுமே இப்படி எழுதுவதற்கு எதற்கு டைரி என்று. வருடா வருடம் பழைய பேப்பர் கடைகளுக்கு அந்த டைரி தவிர எல்லாவற்றையும் போட்டுவிடுவார். குறைந்து 7-8 வருடத்திய பழைய டைரி இருந்திருக்கும். அந்த டைரியை வாங்கி எனது பெயர் மட்டும் தான் எழுதியிருப்பேன். ஆனாலும் அந்த டைரி கிடைக்கவில்லை. அந்த வருடத்தோடு என் தந்தையும் டைரி எழுதும் பழக்கத்தை விட்டுவிட்டதாக நினைவு. இப்போது நினைத்தால் நான் கேட்க நினைத்தது எவ்வளவு பெரிய அபத்தம் என்றும் அன்று வேலையை எவ்வளவு நேசித்தார்கள் என்றும் நினைக்கும்போது மலைப்பாகதான் உள்ளது.

Wednesday, July 10, 2013

மழை


கணுக்கால் வரை நீர் தேங்கியிருந்து
குடையும் இல்லாமல்
சற்றே பெருமழையாக…
சிறிதே இடமிருந்த கட்டிடத்தின் முகப்பில்
அதிகப்பட்ச ஆட்களோடு
நெருக்கியடித்து நின்றதாலோ
என்னவோ…
இருவருக்கும் அன்றிருந்து
மழையின் அதன்பின்னான

தேநீரும் சுவையில்லாமல் போனது