Sunday, November 10, 2013

டாக்காவில தமிழ் வகுப்பு

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர் 

என்ற புரட்சிக்கவி பாரதிதாசனின் வரிகளை மனதில் நிறுத்தி நமது உயிரான, அமுதான தமிழை அடுத்த தலைமுறைக்கு எழுத படிக்க சொல்லித்தர வங்கதேசத்தில் எடுத்த முயற்சிக்கு இந்தோனிசியா தமிழ்ச்சங்கத்தின் மூலம் தோழர் Vivekanandhan Ramanujamஅவர்கள் அங்கே கற்பிக்கப்படும் தங்களின் பாடத்திட்டத்தினை மகிழ்வுடன் தந்தளித்தார்கள். மேலும் ஹாங்காங் தமிழ்பண்பாட்டுக் கழகத்திலிருந்து தோழர் Ram Hkg அவர்களின் குறைந்த கால அவகாசத்தில் சிங்கப்பூர் பாடதிட்ட நூல்களையும் தந்து உதவினார்கள். இப்பணியில் மகிழ்ச்சியோடு தன்னார்வத்தோடு இன்றிலிருந்து ஈடுபடும் ஆசிரியர்களை வாழ்த்துவோம் வாருங்கள்

முத்தம்

முத்தம் கேட்டால்
கணணியில் தலையை 
முட்டிகொண்டு தரும் மகள்
இப்பொழுதெல்லாம் திரை இடிக்குதப்பா,
நீ இங்கே வாவென்கிறாள்...
கல்வி எப்படியெல்லாம்
அறிவை கெடுத்து வைத்திருக்கிறது 


Thursday, October 3, 2013

நம்புவோம்

வர்ணாஸ்ரமத்தை நிலைநிறுத்திய காந்தியை எதிர்த்த பெரியார் தொண்டர்கள் யாரும் இந்துமதவெறி கோட்சேவை ஆதரிக்கவில்லை, அதுபோலவே தமிழர்விரோத காங்கிரசை எதிர்ப்பவர்களும் ஆர்எஸ்எஸ் வழிநடக்கும் மோடியை ஆதரிக்கவில்லை. ஆனால் ஜெயலலிதா மிக தீவிரமாக விடுதலைப்புலிகளை எதிர்த்தபோது வினைத்தொகை போல அன்றும் இன்றும் என்றும் உடனிருந்து ஆதரித்தது போல, ஜெ அனுமதியளித்து திறந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்றுவரை சட்டப்போராட்டம் நடத்தும் வைகோ அவர்கள், இப்போ ராஜபக்சேவின் நண்பரான சு.சாமியின் கட்சியோடு, தனிஈழம் அங்கே யாரும் கேட்கவில்லை என்று இந்தியர்களுக்கு எடுத்து சொன்ன சுஷ்மா ஸ்வராஜ் அவர்களின் கட்சியில் இருந்துகொண்டே தமிழீழம் அமைவதற்கும், ஆர்எஸ்எஸ் வழி நின்று ராமர் பாலமென்று சேதுவை நிறைவேற்றக்கூடாதென்று பிஜேபி தடுப்பதையும் கவலைக்கொள்ளாது அதனுடன் கூட்டணியமைத்து துணைநின்று சேது சமுத்திரம் தோண்டி கொடுக்கவும் மறுபடி வாஜ்பாயை கூட்டிவருவாரு அண்ணன் வைகோ அவர்கள். நாமும் நம்புவோம். இலைமலர்ந்தால் ஈழம் மலருமென்று வாக்களித்தவர்களல்லவா நாம்

Saturday, September 28, 2013

கிழியும் முகத்திரை

வழக்கம் போல் போகாத ஊருக்கு விரிவாகவே வழி சொல்லியிருக்கிறார் தமிழருவி மணியன் இன்றைய ஜுவியில்.. 
தமிழகத்தில் மோடியைப் பிரதமராக்க 15 % வாக்காளர்களும் விஜயகாந்த்திடம் 10% வாக்காளர்களும் மக்களின் சகல பிரச்னைகளையும் கையிலெடுத்துக் கடுமையாகப் போராடி வருவதால் வைகோவிடம் 10% வாக்காளர்களும் சேர்ந்தால் மோடியை பிரதமராக்கி விடலாமாம். 
மாற்றுஅணிக்காக மதிமுகவை முன்னிலைப்படுத்தியது போய் இப்போ தேமுதிகவை நோக்கி கெஞ்ச ஆரம்பித்து விட்டார் தமிழருவி மணியன். கலைஞரை ஆட்சிபீடத்தில் இருந்து அகற்ற ஜெயலலிதாவை முன்னிறுத்த வேண்டியிருந்ததாம். ஆனால் ஜெயலலிதா முதல்வரானதால், போயஸ் தோட்டத்தில் போய் முதுகு வளைந்து முகம் காட்டிப் பல்லிளிக்கவில்லையாம், சீட்டு கொடுக்காமல் வைகோவை தேர்தலுக்கு முன்னே விரட்டிவிட்டவர் இவருக்குக்காக காத்திருப்பாரென்று எண்ணம் போல. 
கழுதை தேய்ஞ்சி கட்டெரும்பான கதையாக //மதுவிலக்கை நடை முறைப்படுத்த மாநிலம் முழுவதும் கால்கள் கொப்பளிக்க // நடந்த வைகோவுடன் கேப்டனை சேரசொல்வது நகைமுரண் தான். இன்னும் பலரின் முகத்திரை கிழியும் போல நாளடைவில்

Thursday, September 5, 2013

தீட்டு

கோவிலை தொடும்போதும்
பஞ்சாயத்து தலைவரான பின் நாற்காலியை தொடும்போதும்
சாதி இந்துகள் பருகும் குவளையை தொடும்போதும்
சாதி இந்துகளின் சுடுகாட்டினை தொடும்போதும்
பொது பாதையை தொடும்போதும்
தேசிய கொடியினை தொடும்போதும்
இது தீட்டென்று மறுக்கும் சமூகம்.....
.........................
.........................
எங்களின் காசு பணத்தை
தீட்டென்று மறுப்பதில்லை


Saturday, August 31, 2013

மழலை தாலாட்டு

குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள்
மழலைசொல் கேளா தார்
வள்ளுவர் சோக்காதான் சொல்லியிருக்காரு.. இது காண்டியும் வள்ளுவருக்கு இன்னொரு புள்ள பொறந்து அந்த ரெண்டாவது புள்ளையை மொதபுள்ள திக்காம திணறாக கொயந்த மொழியில கொஞ்சறதை கேட்டுருந்தார்னு வைச்சிக்கோங்க, அப்ப மாத்தி சொல்லியிருப்பாரு…
மழலையின் தாலாட்டு கேளா தாரென்று

பெரியவங்க சும்மாவா சொல்லி வைச்சிருக்காங்க, முதல் குழந்தை பெண்ணுன்னா ரெண்டாவது புள்ளைக்கு ரெண்டு தாயின்னு..

Monday, July 29, 2013

ஸ்கைப் பல்லி

முகம் பார்த்து பேச ஸ்கைபில் மகளை அழைத்தால்
"அப்பா, பல்லி பாரேன் 
அப்படியே ரொம்ப நேரம் இருக்"கென்று
சுவற்றை நோக்கி கணணித்திரையை திருப்புகிறாள்
அவளிடம் பேசும் ஆசையில் 
பல்லியை ச்சூவென துரத்தினால்
"பாவம்பா தொரத்தாத"..
ஊருக்கு போய் எல்லா பல்லியையும் 
மொதல்ல ஒருவழி பண்ணணும்

அப்பாவின் டைரி கதை

போக்குவரத்து தொழிலாளிகளுக்கு வருடா வருடம் டைரி ஒன்று தருவார்கள். என் தந்தை நடத்துனர். அவரின் நாட்குறிப்பில் தடம் எண் குறிப்பிட்டு இன்று ஏறினேன், இறங்கினேன், என்பதை தவறாமல் குறிப்பிடுவார். சில நேரங்களில் மாதத்திற்கு ஒரு முறையோ இரு முறையோ வேறு சில எழுதியிருக்கும். தினமும் வசூல் செய்ததை சன்னலில் ஒரு கொக்கி மாட்டி சேர்த்திருக்கும். பீரோவின் உள்ள சம்பளம் ரசீது குறைந்த பட்சம் 50 மாதத்திற்கேனும் இருக்கும். ஒரு வருடம் அவரோடு மல்லுக்கட்டி டைரி வாங்க அம்மாவிடன் புகார் கூட செய்தேன். வெறுமே இப்படி எழுதுவதற்கு எதற்கு டைரி என்று. வருடா வருடம் பழைய பேப்பர் கடைகளுக்கு அந்த டைரி தவிர எல்லாவற்றையும் போட்டுவிடுவார். குறைந்து 7-8 வருடத்திய பழைய டைரி இருந்திருக்கும். அந்த டைரியை வாங்கி எனது பெயர் மட்டும் தான் எழுதியிருப்பேன். ஆனாலும் அந்த டைரி கிடைக்கவில்லை. அந்த வருடத்தோடு என் தந்தையும் டைரி எழுதும் பழக்கத்தை விட்டுவிட்டதாக நினைவு. இப்போது நினைத்தால் நான் கேட்க நினைத்தது எவ்வளவு பெரிய அபத்தம் என்றும் அன்று வேலையை எவ்வளவு நேசித்தார்கள் என்றும் நினைக்கும்போது மலைப்பாகதான் உள்ளது.

Wednesday, July 10, 2013

மழை


கணுக்கால் வரை நீர் தேங்கியிருந்து
குடையும் இல்லாமல்
சற்றே பெருமழையாக…
சிறிதே இடமிருந்த கட்டிடத்தின் முகப்பில்
அதிகப்பட்ச ஆட்களோடு
நெருக்கியடித்து நின்றதாலோ
என்னவோ…
இருவருக்கும் அன்றிருந்து
மழையின் அதன்பின்னான

தேநீரும் சுவையில்லாமல் போனது

Wednesday, June 26, 2013

புகைப்படம்

உரக்க சிரித்து
கைகளை நடுங்க செய்தால்
உன் முகம்
எப்படி முழுமையாய்

பதியும்?

குறும்பு

ஏதேனும் தவறை செய்துவிட்டு
திட்டிவிடுவேனோயென்று பார்க்கிறாய்
குறுகுறுவென உன் பார்வையை ஓரிரு நிமிடம்
பார்த்திருக்கும்போது தைரியம் பெற்று 
சிரித்து கோபத்தை மடைமாற்றிவிடும்
சாமர்த்தியத்தை எங்கு பெற்றாயோ என் மகளே

காதல்

உனக்கான என் ஒற்றைத் துளி நீர்
என்னையும் அறியாமல் 
உணர்த்தி விட்டுப் போனது
உன் மீதான என் காதலை.. 

உறக்கம்

காற்றில்லாத இடம் மட்டுமல்ல
நீயில்லாத அறையும் 
வெற்றிடமே...


உன் கேள்விக்கு மட்டும் விடை இல்லை என்னிடம்...
உறக்கமின்றி தவிக்கிறேன் உன் நினைவால் . . 

விழி வழி மீது......
வாசலில் தவமாய்!

சிட்டுக்குருவி

அறைக்குள் தெரியாமல் 
நுழைந்துவிட்ட 
சிட்டுக்குருவியை 
பிடித்து உணவு, நீர் அளித்தேன், 
அலகால் தொடக்கூடவில்லை. 
விடுதலையாய் வெளியேறவே முனைந்தது 

மழை

மழையில் நனைந்தால் 
குடை ஈரமாகும்
என்று 
மீண்டும் வீட்டுக்குள் 
வேகமாய்...
உன் மேல் வீழாத 
மழைத்துளி வீணென்று 
மேகமும் 
நிறுத்திக்கொண்டது பின்னே

Tuesday, June 25, 2013

மகளதிகாரம்

மகளதிகாரம் துவிட்டுகளின் தொகுப்பு

அ/ஆ சரி, இ/ஈ கூட சரிதான், அப்படியே சொல்லிகிட்டு வந்து ஐ/ஐயி என்று சொல்லும் உனக்காக உயிரெழுத்தை ஒன்று கூட்டலாமே

கோபத்தில் "என் கூட பேசாதே" என்று நீ சொல்லிய பின் நான் மௌனமானால் மீண்டும் மீண்டும் பேசாதே என்கிறாய், என்ன செய்ய நான்

ஏபிசிடி 26 தான்னு யாரு சொன்னது, சின்ன ஏ, பெரிய ஏ என்று மொத்தம் 52 - முடியல எழுதவைக்க

கைபேசிய தண்ணி ஊத்தி கழுவுற சோனி விளம்பரத்தை தடை பண்ணுங்கப்பா, நேற்று எனது ஐபோன் கழுவப்பட்டது 

கல்வெட்டு படிக்க பயிற்சியெல்லாம் தேவையில்லை, மகளின் அரிச்சுவடி எழுதுவதை கண்டு கொண்டாலே போதும் 

ஆங்கில எழுத்தை ஒவ்வொன்றாய் சொல்லி கொண்டே வரும்போது எல் என்பதை ட (ta) என்கிறாள்

அப்பா பலூன் பா, ப்ளீஸ் பா பலூன் வாங்கி கொடுப்பா; அப்ப்பா.... பலூன். டேய்... 

அலட்சியபடுத்தி வேகம் குறைக்காமல் செல்லும் வேகத்தடையில் மகளின் வார்த்தை; அப்பா, பொறுமையா போப்பா பார்த்து போப்பா 

தக்காளி நீலக் கலரில் காய்ப்பதற்கு மரபணு மாற்றமெல்லாம் செய்யவேண்டியதில்லை, ஸ்கெட்ச் அந்த கலரில் மகளிடம் இருந்தால் போதும்

போன் போட்டு கொடு அப்பாகிட்ட பேசனும் என்று அடம்பிடித்து மகள் சொல்கிறாள், "அம்மா திட்டிகிட்டே இருக்காங்கப்பா". நான் கேட்டேன் உன்னையுமா என்று

கண்மணி அப்பாவை இங்க கூப்பிடு.. அப்பா, இங்க வாடா ...மரியாதையா கூப்பிடுமா..அப்பா, இங்க மரியாதையா வாடா..

Monday, June 24, 2013

தாய்மொழிக்கல்வியும் தொழில்கல்வியும்

தமிழில் படித்தால் சட்டி சுரண்டுகிற வேலைக்கு கூட லாயக்காக மாட்டார்கள் - இப்படி "துக்ளக் சோ" சொல்லியிருக்கிறார். 
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன பெரியார் உள்ளபடியே தமிழ் சீர்திருத்தத்திற்கு உதவி மொழியை செம்மைப்படுத்தினார். தமிழ் நீசமொழி என்று சொன்னவர்கள் தமிழ் கருவறைக்கு வெளியே தான் வைத்துள்ளார்கள். துக்ளக் தமிழில் தானே வருகிறது, தமிழால் வயிறு வளர்க்கும் சோ தமிழ் மூலம் படிப்பவர்களுக்கு தன் ஏட்டில் ஆக்கப்பூர்வமாக ஏதேனும் வேலைவாய்ப்பிற்கு செய்கிறாரா.? எப்பாடு பட்டேனும் தமிழை அழிக்க துடிக்கும் சிலரோடு சேர்ந்து மற்றவர்கள் குழம்பிக்கொள்வதால் வந்த பிரச்சனை இது.
தாய்மொழிக்கல்வியையும் தொழில்கல்வியையும் குழப்புவதால் வந்த பிரச்சனை இது. தமிழில் கல்வி கற்க வேண்டும் என்பது தாய்மொழியில் கல்வி கற்றால் அறிவு வளர்ச்சிக்கு உதவும் என்பதோடு சிந்தனை ஆற்றல் பெருகும். அனைத்து வகையான தொழில்கல்வியையும் தமிழில் படிக்கவேண்டுமென்பது தமிழ் வளர்ச்சியோடு அந்த மொழி படிக்கும் மாணவர்களின் அறிவு திறனுக்கே. தமிழில் படிப்பதால் வேலை தரவேண்டும் என்பது வாதமல்ல. இதற்கு முதல் படி அனைத்து தொழில்நுட்பப் பயிலக புத்தகங்களையும் தமிழ் படுத்த வேண்டும்




கணிணி உள்ளீடுகளில் அதிக எழுத்துரு கொண்டதால் நாம் எவ்வளவு இன்னல்களை எதிர்நோக்குகிறோம். இன்னும் கொஞ்ச நாள் பெரியார் இருந்திருந்தால் வரிசை உயிர்மெய் எழுத்தையும் (க்+=கு,ங்+=ஙு,ச்+=சு) வரிசை உயிர்மெய்எழுத்தையும் (க்+=கூ,ங்+=ஙூ,ச்+=சூ) காலத்திற்கேற்ப மாற்றம் செய்திருப்பார். அவரின் பணியை தொடராததால் வந்தவை இது. மாற்றியிருந்தால் இன்னும் எளிதாக கணணியில் உபயோகப்படுத்த பட்டிருக்கும். அதற்காக தமிழின் புனிதம் கெட்டுவிடும் என்று எண்ணத்தேவையில்லை. தோன்றிய காலம் தொட்டு தமிழ் மாற்றம் பெற்றே வந்திருக்கிறது. வளர்ச்சிக்கு மாற்றம் தேவையே